Sunday, April 22, 2007

உலகம் எங்கோ செல்லுகிறது

எங்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு..இவைகள் புதிய வார்த்தைகள் அல்ல. அனுதினம் நம் வழக்கு மொழி சொல்லகராதியில் தடுமாறாமல் உச்சரிக்கும் பழக்கமான‌ வார்த்தைகள் ஆகிவிட்டன. அதை நாம் கண்கூடாக காண்கிறோம். காலையில் எழும்பி சந்தோசமாக வெளியே போகிறோம். திரும்ப வீட்டுக்கு வந்தால் தான் நிம்மதி என்கிற நாட்கள். அமெரிக்காவில் சில வருடங்களாக நடக்கிற நாட்டு நடப்புக்களைப் பார்க்கும் போது 'சேப்டி' ‍ பாது காப்பு ' என்றால் என்ன விலை கேட்கும் அளவுக்கு நாட்கள் கொடியவைகளாகக் காணப்படுகின்றன. கல்லூரிக்குச் செல்லுகிறவர்கள் அநேகராக இருக்கலாம்; ஆனால் பள்ளி கல்லூரிக்குச் சென்று விட்டுவீடு திரும்பும் மாணவர்கள் சிலர்தான். போன வாரம் வெர்ஜினியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வு அதை நமக்கு உதாரணம். நேற்று நாசாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வேலைக்குப் போய்விட்டு திரும்ப வருவார் என்று எதிர்ப்பார்த்திருக்கும் குடும்பத்திற்கு ஏமாற்றம் தரும் காரியம் இன்னுமொரு உதாரணம். இப்படிக் காலத்தைப் பார்க்கும் போது குருவி காக்காப் போல உயிர்களை சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள், உயிரே...உனக்கு பாதுகாப்பில்லையா??

Saturday, April 21, 2007

Monday, March 26, 2007

கோபம்

உன் முகம் செவக்கிறதாலே கோபமா?
இல்லை நீ கோபங்கொண்டாதாலே முகஞ்சிவந்ததா?
கோபப்பட்டதால் என்னோடு பேசாமல் இருப்பது நியாயமா?
நான் கேலிக்காக‌ச் சொன்ன‌து உன‌க்கு கோப‌மா?

கோபம் வருவது இயற்கை தான்
கோபம் உணர்ச்சிகளில் ஒன்று தான்
இறைமகனும் கோபப்பட்டது உண்மைதான்.
கோப‌ப்ப‌ட்டாலும் பாவ‌ஞ்செய்யாதே என்ப‌து வேத‌ம்!
இருட்டுமுன் உன் கோப‌ம் த‌ணிய‌ட்டும் என்ப‌தும் வேத‌ம் தான்.
என‌வே கோப‌த்தைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாதே
கோப‌த்திலிருந்து நீ த‌ணிந்த‌தால்
கோப‌ம் உன்னில் கோபப்ப‌ட‌ட்டுமே!

கிரிக்கெட்

கத்துக்குட்டிகள் என்று மைக்கேல் ஹோல்டிங் சொன்னாலும் அவர் பேச்சை ஹோல்டிங் (பிடித்து) பண்ணிக் கொண்டு, அயர்லாந்தையும் பங்களாதேஷையும் கத்துக்குட்டிகள் என்று தவறாக எடை போட முடியாது. வேகமாக ஓடும் முயலுக்கும் மெதுவாக நகரும் ஆமைக்கும் இடையே நடந்த போட்டியை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். எப்படியானாலும் வெற்றி வெற்றி தான்! தோல்வி தோல்வி தான்! ஆனைக்கும் அடிச் சறுக்கும் என்ற கூற்று உண்மையானாலும் ஆனைக்கு எப்போதுமே அடிச் சறுக்குமா? நடந்து முடிந்த 3 போட்டிகளில், சாத்தான் குளத்திலிருந்து வேதம் ஓதும் தம்பி ஆசீப் மீரான் சொன்னது போல செத்த பாம்பாகிய பெர்முடாவை மட்டுமே அடித்து சாதனை புரிந்த இந்தியர்க‌ளை எப்படி யானைக்கு ஒப்பிட முடியும்?

Saturday, March 24, 2007

சனிக்கிழமை - ஒரு சிந்தனை

சனிக்கிழமை என்றாலே விடுமுறை என்றும் ஓய்வு என்றும் அமெரிக்காவில் அனைவரும் அறிந்ததே! ஆனால் அறிந்த உண்மையைப் பற்றிப் பேசவில்லை...அலைந்து.. பரந்து கிடக்கின்ற அமெரிக்காவின் உண்மையைப் பற்றிப் பேசுகிறேன்.

நாளும் நாடும் நம்மை சோம்பேறி ஆக்குவதில்லை. ஆனால் நாம் சோம்பேறி ஆக இருப்பது நமது சுயநலமே ஒழிய நாட்டின் நலம் கருதி அல்ல. அதனால் நாம் நலமிழந்து நலிவிழந்து காணப்படுகிறோம். அதற்கு நாம் என்ன செய்யலாம்?

நாட்டிற்கு வந்திருக்கும் நாம் இந்த நாட்டின் நல்ல கலாச்சாரங்களை கற்றுக் கொள்வதும் நாம் அதை நடைமுறைப் படுத்துவதும் தவறில்லை தானே! இந்த நாட்டுக்காரர்களைப் பாருங்கள். நேரத்தை பயன்படுத்துகிறார்கள்.

தன் கையே தனக்குதவி என்று கருமமே கண்ணாக‌ பெயின்ட் அடிப்பது, புல் வெட்டுவது, தோட்டத்தை பண்படுத்துவது போன்ற வீட்டு வேலைகள் செய்வதிலும் விளையாடுவதிலும், வேட்டையாடுவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி காலா காலத்தில் நேரத்தோடே படுக்கைக்குச் சென்று விடுகின்றனர். எனவே காலையில் நேரத்தோடே எழுந்திருக்கும் போது மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றனர். அது மட்டுமல்ல சோம்பலில்லாமல் இயங்குகின்றனர். நிறைய நேரமும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதை நாம் முயற்சி செய்யலாமே!